குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


எமது வலைத்தளத்தினை படிப்பவர்கள் ஸ்ரீ வித்தையின் மூலம் எளிமையான முறையில் தெய்வ சக்தியினை பெற்று ஆன்ம உயர்வும் எல்லா சௌபாக்கியங்களும் பெறும் ஸ்ரீ ஜோதியின் விளக்கமும் பங்கு பெறும் முறையும் இந்த இணைப்பில் காண்க


எளிய ஸ்ரீ வித்யா சாதனை வழிகாட்டி: PDF கோப்பாக தரவிறக்கி கொள்ள

ஸ்ரீ வித்யா சாதனை படிவத்தினை நிரப்ப : படிவம்

மனிதனில் தேய்வ சக்தியை விழிப்பிக்கு காயத்ரி சித்த சாதனை : பயிற்சிக் குறிப்பினை தரவிறக்கி கொள்ள


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


ங்கள் அகஸ்திய மகரிஷியின், குருமண்டலத்தின் அருள் பெறுவதற்கு உங்கள் பெயர் எமது பிரார்த்தனையில் இணைக்க இந்த இணைப்பில் உள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றவும்.


நீங்கள் ஸ்ரீ ஜோதி இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


அகத்தியர் யோக ஞானதிறவுகோல் வகுப்பும் மூலகுரு மந்திர உபதேசமும் பெற‌ : இந்த படிவத்தை நிரப்பி தொடர்பு கொள்ளவும்

உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்

இங்கே


-அன்புடன் சுமனன் -

Friday, January 19, 2018

ஆன்மீகம் என்றால் என்ன? 06: ஆன்மீக மூட நம்பிக்கைகள்

இந்த உலகில் பலவகை மூட நம்பிக்கைகள் காணப்படுகிறது. ஆண்கள் மட்டும்தான் சில தெய்வங்களை வணங்க வேண்டும், பெண்கள் வணங்ககூடாது. சில ஜாதியை சேர்ந்தவர்கள் உயர்ந்தவர்கள் சிலர் தாழ்ந்தவரகள் என்ற எண்ணம். குணத்தளவே ஆகுமாம் குலம் என்று ஒருவனது மனப்பண்பே ஒருவனின் தகுதியை நிர்ணயிக்கும் என்று எமது முன்னோர்கள் வகுத்து வைத்திருக்க இன்று பலர் அறியாமையில் பல மூட நம்பிக்கை வளர்த்து திரிகிறார்கள்.

இப்படி ஆன்மீகத்திலும்  மூட நம்பிக்கைகள் பல இருக்கின்றன. இறைவனின் நாமத்தை கூறிவிட்டால் முக்தி கிடைத்துவிடும், பூஜை செய்துவிட்டால் இறைவன் திருப்திப்பட்டு விடுவான், இப்படி திருப்தி பட்ட இறைவன் நாம் கேட்பதெல்லாம் தருவான் இப்படி பலர் மூட நம்பிக்கையில் இருந்து வருகிறார்கள். இடைக்காலத்தில் அரசர்களும் அதிகாரம் படைத்தவர்களும் தமது அதிகாரத்தையும் ஆடம்பரத்தையும் தாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று காட்டவும் உருவாக்கிய முறைகளே இன்று பெரும்பாலும் கோயில் பூஜை, திருவிழாக்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய எண்ணத்துடன் பூஜையை செய்யும் எவரும் அதற்கான பலனை பெறுவதில்லை.

உலகை படைத்து காத்து அழிக்கும் கடவுள் இத்தகைய சொற்ப அற்ப உபச்சாரங்களுக்கு மதி மயங்கும் ஆசாமியாகவா இருப்பார்? இப்படி நினைப்பது எவ்வளவு தவறு?  நேர்மையான ஒரு அதிகாரியையே இப்படி வளைக்க முடியாமல் இருக்கும்போது பிரபஞ்சத்தின் உயர்ந்த சக்தியை எப்படி பூஜைகளாலும், யாகங்களாலும் அடிமையாக்க, ஏமாற்ற முடியுமா?
அப்படியானால் இவை எல்லாம் எந்த பிரயோசனமும் அற்றவையா?


இல்லை! அதன் பொருளறிந்து, பலனறிந்து, குறித்த நோக்கத்தினை அடைவதற்காக செய்யப்படுபவை நிச்சயம் பலனளிக்கும். இன்றைய வெளிப்பகட்டு பூஜை, திருவிழா, வழிபாடுகளின் உண்மை வடிவம் உபாசனையும் சாதனையும் ஆகும்.

உபாசனையினதும் சாதனையினதும் உண்மை நோக்கம் தன்னை சுத்தி செய்துகொள்வதும் முன்னேற்றிக்கொள்வதுமாகும். தபம் என்பதும் எமது தீய பண்புகளை சுட்டெரித்தல் என்றும் யோகம் என்பது நல்ல பண்புகளை வளர்த்து பரமான்மாவுடன் இணைதல் என்றும் பார்த்தோம். ஆக ஒருவன் தனது அடிப்படை பண்புகளை வளர்த்துக்கொள்வதாலும் பக்தியாலும் மட்டுமே இறையருளுக்கு பாத்திரமாகலாமன்றி வெறுமனே பூஜை செய்வதாலும் கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பதாலும் அல்ல.


ஜெபம், தியானம், வழிபாடும், கூட்டுப்பிரார்த்தனை, பூஜை என்பவற்றின் உண்மை நோக்கம் மனிதனை கருணை, தர்ம சிந்தனை போன்ற நற்குணங்களை தம்முள் நிரந்தரமாக வளர்ப்பதற்காகவே அன்றி இறைவனை திருப்திப்படுத்த அல்ல. 

Thursday, January 18, 2018

ஆன்மீகம் என்றால் என்ன? 05: யோகமும் ஆன்மீகமும்

இன்று யோகா, யோகம் என்பது உலக பிரபலமான ஒன்றாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. மன அழுத்ததிற்கும், சக்கரை நோய்க்கு, உடல் பருமனுக்கு என்று யோகா விளம்பரப்படுத்தப்படுகிறது. இதுவா யோகம்?

இல்லை!

யோகம் என்பது சமஸ்க்ருதத்தில் யுஜ் என்ற சொல்லில் இருந்து பரிணமித்த சொல். இந்த சொல்லின் பொருள் இணைதல். எதனுடன் இணைதல்? மனித உடலில் உணர்வு சக்தியாக இருக்கும் ஆன்மா அதன் உண்மை ஸ்வரூபமான பரமான்மாவுடன் இணைதலே யோகம்.
இது எப்படி சாத்தியம்?

ஒருவன் தன்னில் அந்த பரமான்மாவின் குணத்தை தன்னில் உருவாக்கி, அதை தினசரி செயலில் கொணர்ந்து, தனது பண்பாக மாற்றினால் மட்டுமே இந்த இணைவு சாத்தியம்.

ஆக நாம் யோகம் செய்கிறோம் என்று செய்யும் எல்லா பயிற்சிகளிலும் இது நடைபெறுகிறதா என்பதை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆக ஒரு மனிதன் இறைவனைக்காண்கிறான் என்பது தன்னில் அந்த தெய்வத்தின் நற்குணங்களையும் தனது ஆளுமையில் அந்த பண்புகளையும் உருவாக்குகிறான் என்பதே அர்த்தம் அன்றி கற்பனை காட்சிகளை காண்பதோ, வேடங்கள் போட்டு தன்னை ஆன்மீகத்தில் உயர்ந்து விட்டதாக கற்பித்துக்கொள்வதோ அல்ல.

கடவுளின் எல்லையற்ற குணங்கள் அனைத்தையும் ஒருவன் தன்னில் உருவாக்கி கொள்வது என்பது உண்மையில் சாத்தியமற்றது. ஆகவே ஒருவன் விராட் பிரம்மம் என்ற கடவுளின் குணங்களும், பண்புகளும் நிறைந்த பிரபஞ்சத்தையும், நாம் வாழும் இந்த பூமியின் இயற்கையை விஸ்வ பிரம்மமாகவும், இவற்றிலும் தன்னிலும் ஓடும் உயிர்ப்பை ஜீவபிரம்மமாகவும் உணர்ந்து பழகுதலே யோகம்.

சுருக்கமாக யோகம் என்பது எமது நான் என்ற எண்ணத்தை விரிவடையச் செய்து பிரபஞ்சத்தில் உள்ளவற்றை தன்னில் ஒரு பாகமாக பார்க்கும் சரியான மனப்பாங்கினையும், தனக்கு மட்டும் செயல்புரியாமல் மற்றவர்களுக்காகவும் செயல்புரியும் பண்பினையும் உருவாக்கும் செயல்முறை என்பதே யோகத்தின் உண்மை விளக்கம்.


ஆன்மீகம் என்றால் என்ன? 04: ஆன்ம சாதனைக்குரிய வழிகள்


மனிதன் தனது உணர்வு சக்தியை மனதின் பிடியில் இருந்து விழிப்பித்தால் அதீத மன, பிராண, உடல் ஆற்றல்களை பெறலாம் என்பது ரிஷிகளின் சித்தர்களின் ஆன்ம விஞ்ஞானமாகும்.

மனமே உணர்வு சக்தியை ஈர்க்கும், செயற்படும் அலகு. இந்த மனம் அதிக சலனத்திற்கோ அல்லது புலன் வழி அதிகம் ஈர்க்கப்படும்போது அதன் மூலமாகிய உணர்வுடன் தொடர்பினை இழந்து விடுகிறது. இப்படி மனம் உணர்வை விட்டு விலகி குழம்பிய நிலையே துன்பம், குழப்பம் எனப்படுகிறது.

இது மனிதன் தனது மனத்தை இயற்கையின் விதிக்கு மாறாக பயன்படுத்துவதாலும், அசுர எண்ணங்களில் செலுத்துவதாலும் தனது ஆளுமையை தாழ்மைப்படுத்திக்கொள்வதால் ஏற்படுகிறது.

ஆக ஒருவன் தனது துன்பங்களில் இருந்து மீண்டு இன்ப வாழ்க்கை பெற விரும்புவன் தனது உணர்வு சக்தியின் பால் மனதை திருப்ப வேண்டும். இதற்கு முதலில் மனதை தூய்மைப்படுத்த வேண்டும். இரும்பில் துருப்பிடித்திருந்தால் அதை நீக்குவதற்கு அதை அக்னியில் சூடாக்கவேண்டும், அல்லாவிடில் அமிலத்தால் எரிக்க வேண்டும். இதுபோல் மனம் அழுக்கடைந்திருந்தால் மனதை தபஸ் எனும் அக்னியில் சூடாக்க வேண்டும்.
தபஸ் என்றாலே சூடாக்கல் என்றே பொருள். மனதில் உள்ள வேண்டாத எண்ணங்கள், பழக்கவழக்கங்கள், மனப்பாங்கு (attitude) போன்றவற்றை நீக்கி மனதை ஒரு ஒழுங்கிற்கு கொண்டுவந்து ஒரு இலக்கில் நிறுத்துவது தபஸ் எனப்படும்.
புறத்தில் எதிரி என்று தெளிவாக தெரிந்த ஒருவனுக்கு எதிரியை சமாளிப்பது எளிது. ஆனால் தன்னுடன் கூட இருக்கும் எதிரியை அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. அதுபோல் மனதில் இருக்கும் தமது குறைகள் எளிதாக குறைகளாக தெரியாது. அவை எமது இயல்பான நல்ல குணங்களாகவே எமக்கு பிரதிபலிக்கும். ஆகவே எது சரியான எண்ணம் செயல் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு துணிதுவைப்பவன் (முற்காலத்தில்) செய்யும் செயல் முறை போன்றது இது. துணியை முதலில் வெள்ளாவி கட்டி, பின்னர் சவர்க்காரம் போட்டு, பின்னர் நன்கு தேய்த்து, பிறகு அடித்து துவைத்து பின்னர் சுத்தமான நீரில் கழுவி வாசனை திரவியம் இடல் போன்றதே தபஸ்.
இது வெறுமனே உடலை முள்ளால் தைத்து, நெருப்பில் துன்புறுத்தி உடலை துன்புறுத்துவதல்ல தபஸ். தபஸில் நான் கு படிகள் இருக்கிறது.

  1. புலன்கள் வழி செல்லுதலை தடுத்தல், கட்டுப்படுத்தல், அளவுடன் பயன்படுத்தல்.
  2. நேரத்தை ஒழுங்காகவும் வினைத்திறனாகவும் பயன்படுத்தல்.      
  3. பணத்தை நேர்மையாகவும், வினைத்திறனாகவும் பயன்படுத்தல்
  4. சிந்தனையின் போது எண்ணங்கள் எப்போதும் ஆக்கபூர்வமாகவும், வேண்டாத விஷங்களைப் பற்றிய வீண் சிந்தனை இல்லாமலும் மனதை வைத்துக்கொள்ளுதல்.


எமது ஐம்புலன்களும் இன்பத்தையும், இயக்கத்தை விரும்புவது, நேரத்தை எப்படி எதில் பயன்படுத்துகிறோம், வளங்களையும், பணத்தையும், மனதையும் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே எமது உலக வாழ்க்கை. ஆகவே இந்த நான் கு விஷயத்திலும் ஒரு ஓழுங்கைக்கொண்டு வருவதன் மூலம் ஒருவன் தனது வாழ்வை கட்டுப்பாட்டிற்குள் கோண்டு வரமுடியும்.

இங்கு பலரும் தம்மை குழப்பி சோர்ந்து போகும் விஷயம் “கட்டுப்படுத்தி அளவாக தமது புலன் களை பயன்படுத்துதலுக்கும், புலன் இன்பங்களை அடக்கி ஒதுக்கி இருப்பதற்குமிடையிலான வேறுபாடு.

இன்று ஆன்மீக வாழ்க்கை என்று தமது குடும்பத்தில் இன்பத்தை சிதைத்தவர்கள் பலர். கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் இயல்பான வாழ்க்கை ஆன்மீக வாழ்விற்கு தடை என்று மயங்கி தமது குடும்ப உறவை சிதைத்தவர்கள் பலர். கிருகஸ்த அசிரமத்தில் இருந்துகொண்டு தபஸை செய்யும் எந்த சாதகரும் தமது ஆசிரமத்திற்கு உகந்த தர்மத்தை சரிவர செய்வதால் மட்டுமே ஆன்ம முன்னேற்றம் பெறமுடியும்.

ஆகவே சாதனை, ஆன்மீக, தபஸ் என்ற வார்த்தைகளை கேட்டவுடன் உடனே காவி கட்டுதல், ருத்திராக்ஷம் போடுதல், வேஷங்களை போட்டு தம்மை உலகில் இருந்து மாறுபட்ட கோமாளிகளாக காட்டிக்கொள்ளுதல் என்பவை உண்மை ஆன்மீகம் அல்ல. தமக்கு கர்மத்தினால் அமைந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு தமது அகத்தினை/மனதை புடம் போட்டு வாழ்வினை செம்மைப்படுத்துவதே உண்மை ஆன்மீகம்.


ஆன்மீகம் என்பது ஒருவன் தனது மனம், புலன்கள், செல்வம், நேரம் ஆகிய நான் கினையும் சரியான வழியில் ஒழுங்குபடுத்தி தனது உணர்வு சக்தியின் ஆற்றலை தன்னில் விழிப்பிக்கும் செயல்முறை. இதுவே ரிஷிகளும் சித்தர்களும் அனுபவ பூர்வமாக செயல்கொண்ட முறை. 

Wednesday, January 17, 2018

ஆன்மீகம் என்றால் என்ன? 03: தர்ம சக்கரம்


Image result


இன்று மனிதர்கள் பலர் தாம் நாத்திகர் என்று கூறிக்கொள்வதிலும், எல்லாப்பிரச்சனைகளுக்கும் மதம்தான் காரணம் என்றும் அல்லது குறித்த பிரிவு ஜாதியை சேர்ந்த மனிதர்களால்தான் தாம் தாழ்த்தப்பட்டுவிட்டோம் என்றும் கோஷமிடுவதை காண்கிறோம்.

மனிதனில் உள்ள சேதன சக்தி புத்தியுடன் இணைந்து செயற்பட்டால் அந்த மனிதனின் உணர்வு தனது சுய நலத்திற்குட்பட்டதாக மட்டும் இருக்காமல் பிரபஞ்ச உணர்வாக விரிவடைந்து காணப்படும். ஆனால் மனதின் வழி சுய நலத்துடன் செயற்படும் மனம் அரக்க குணத்துடன் பிரிவினை வாதம், மற்றவர்களை அடிமைப்படுத்தல், தாம் வாழ பிற உயிர்களை வதைத்தல் என்றவாறு இயங்க ஆரம்பிக்கிறது.


உதாரணமாக தீய சமூகம் உருவாவது ஒரு சமூகத்தின் மனிதர்களின் எண்ண நிலை கீழ் நிலைமை அடையும் போது, தமக்கெனெ எந்த இலட்சியமும் இல்லாத போது, தர்மம் இல்லாமல் போகும்போது. இங்கு தர்மம் என்பதன் பொருள் அச்சாணி என்பதாகும். த்ர என்ற சமஸ்க்ருத அடிச்சொல்லில் இருந்து உருவானதே தர்மம். இது ஒன்றுடன் பிணைப்பது என்ற பொருளை தரும். எது ஒரு தொகுதியுன் பிணைத்து அந்த தொகுதி சீராக இயக்க துணை புரிகிறதோ அது தர்மம் எனப்படும். ஆகவே உலகின் ஒத்திசைவான சீரான இயக்கத்திற்கு தர்மம் அவசியம். இதை விளங்க வைக்கவே புத்தர் தர்ம சக்கரம் என்று குறிப்பிட்டு தர்மத்தை சக்கரமாக குறியீடாக வைத்தார். 

ஆன்மீகம் என்றால் என்ன? - 02

இறை நம்பிக்கை உள்ளவர்கள் கோயிலிற்கு செல்வதையும், பூஜைகள் பல செய்வதையும், தீர்த்த யாத்திரை செய்தல், மலையேறுதல், நேர்த்திக்கடன் வைப்பதையும் பார்க்கிறோம். இவர்கள் கடவுளுக்கு எல்லாவற்றையும் செய்தபின்னர் தமது வேண்டுதலை முன்வைக்கிறார்கள்.

பெரும் அளவில் பணத்தை தருவதாகவும், தங்க நகை செய்து தருவதாகவும், கட்டிடம் கட்டித்தருவதாகவும் உறுதி அளிக்கிறார்கள். அப்படியானால் கடவுள் அவ்வளவு பேராசை பிடித்த ஒருவரா? இத்தகைய லஞ்சத்திற்காக கேட்பதையெல்லாம் கொடுப்பதற்கு?

இன்னும் சிலர் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் கடவுளை திருப்திப்படுத்தி தாம் நினைப்பதை அடையலாம் என்று எண்ணுகிறார்கள். அப்படியானால் கோயிலின் மூலஸ்தானத்தில் இருக்கும் பூசகர்கள் அனைவரும் இறை நிலை அடைந்திருப்பார்கள் அல்லவா?

ஆகவே உண்மையான ஆன்மீக முன்னேற்றம் என்பது என்ன?

ரிஷிகளும் சித்தர்களும் தரும் பதில் தபஸ் அல்லது தவம் மற்றும் சாதனா அல்லது சாதனை. இந்த இரண்டுமே ஒருவனது உணர்வை உயர் நிலை அடையச்செய்ய முடியும்.

தவம் என்பது தன்னை தன்னை சுயகட்டுபாடு மூலம் கடுமையான சூழலுக்கு பழக்கப்படுத்திக்கொள்ளல். ஆசனங்கள் செய்வது, உணவினை தவிர்த்து விரதம் இருப்பது, சோர்வின்றி மன உற்சாகத்துடன் மலை ஏறுதல், கிடைப்பதை மட்டும் உண்ணல் என்பவை தவத்தின் உதாரணங்களாகும். இதன் மூலம் உடல், மனம் என்பவற்றில் ஏற்படும் துன்பங்களை சகித்து மனதை விரக்தி இன்றி உற்சாகத்துடன் இருக்கும் மனப்பண்பு ஒருவனுக்கு ஏற்படும். இப்படி பண்படுத்திய மனதையும் உடலுமே சாதனையில் செல்லுவதற்கு உதவும், அனேகர் இவற்றையே ஆன்மீகம் என்று எண்ணிக்கொள்கிறார்கள். இவை மனதையும் உடலையும் பண்படுத்தும் புடம் போடும் ஆரம்ப பயிற்சிகளே.

சாதனை அல்லது சாதனா என்பது ஒருவன் தனது சுயமுயற்சியுடன் தன்னை சுயகட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, சுய முன்னேற்றமடையச் செய்து, தெய்வ குணங்கள் உடையவனாக தன்னை உருமாற்றம் செய்யும் முயற்சி சாதனா எனப்படுகிறது. ஒருவன் சாதனா மூலம் மனப்பாங்கு எப்போதும் நேர் எண்ணங்கள் உடையதாகவும், மனம் விரிவடைந்து எல்லாவற்றையும் ஏற்று சிந்தித்து புரியும் ஆற்றல் உள்ளதாகவும், உயர்ந்த குணங்களை மனப்பண்புகளையும் உருவாக்கும் செயல்முறையை செய்கிறான்.

ஆக சுருக்கமாக சாதனை என்பது ஒருவன் தனது ஆளுமையில் தூய்மையை கொணர்ந்து, தனது செயல்கள் நேர்மையுடனும், உணர்ச்சிகளுலும் எண்ணத்திலும் ஞானத்துடனும், செய்கையில் தர்மத்துடனும் சரியான செயல்களை செய்யும் உள்ளவனாக மாறுதலே ஆன்மீகத்தின் அடிப்படை நோக்கம்.

இப்படி ஒருவன் செய்தால் அதுவரை தான் அல்லது நான் என்று அவன் எண்ணிக்கொண்டிருந்த வட்டம் விரியத்தொடங்கும். இதை உணர்வு சக்தி அல்லது சேதன சக்தி என்று சொல்லுவார்கள். இந்த உணர்வு சக்தி சாதரணமானவர்களில் நான் ராமன், இன்னாருடைய மகன், இந்த வேலை செய்கிறேன், இந்த ஜாதியை சேர்ந்தவன், என்ற அடிப்படையில் தாம் ஏற்படுத்திக்கொண்ட அபிமானங்களின் அடிப்படையிலேயே செயல்புரிகிறது. ஆனால் சாதனையால் தன்னை விரிவு படுத்திக்கொண்ட ஒருவனின் உணர்வு சக்தி மெதுவாக விரிவடைந்து பிரபஞ்ச உணர்வு சக்தியாக மாறுகிறது. தான் என்ற உணர்வை பிரபஞ்ச உணர்வாக விரிவடைய செய்யும் செயல் முறையே ஆன்ம விஞ்ஞானத்தின் இலக்காகும்.
இன்று நவீன விஞ் ஞானம் பௌதீக ஜட சக்திகளைப் பற்றி ஆராய்வதிலேயே தமது இலக்கினை நிர்ணயிக்கின்றன. ஆனால் ரிஷிகளும் சித்தர்களும் உணர்வு சக்தியை எப்படி கையாள்வது என்றே ஆராய்ந்தனர். இந்த விஞ் ஞானமே ஆன்ம விஞ்ஞானம் எனப்பட்டது. இந்த விஞ் ஞானத்தை சுயமாக பரிசோதிக்கும் பயிற் சியே சாதனை அல்லது சாதனா எனப்பட்டது.

ஆன்ம விஞ் ஞானம் கண்டறிந்த உண்மைகளில் ஒன்று உணர்வு சக்தி மனிதனில் மனதின் ஒரு பாகமான புத்தியின் மூலம் செயல் கொள்ளுகிறது என்பது. மனதின் மற்றொரு பாகம் புலன் கள் வழி செயல்பட ஒருபாகம் உணர்வு வழி செயற்ப்படுகிறது. உண்மையில் எந்த ஒருமனிதனது அறிவுத்திறன் என்பது அவனது உள்ளிரிந்து வரும் உணர்வு சக்தி மனதிற்கு தரும் ஆற்றலே, இந்த ஆற்றலை மனிதன் மனதின் மூலம் தனது சுக போகங்களுக்காகவும், சூழ்ச்சிகளுக்காகவும், ஆசைகளுக்காகவும் பயன்படுத்திக்கொள்கிறான்.


ஆக எல்லாமனிதர்களிலும் புத்தியை செயற்படுத்த உணர்வு சக்தி இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. எனினும் இந்த உணர்வு சக்தி மனதின் பிடியில் சிக்கிவிடாமல் உலகை உயர்விக்கும் எண்ணங்களை தோற்றுவிப்பதற்கு மனிதன் தன்னை பயிற்றுவிக்கும் பயிற்சியே சாதனை. இதுவே ஆன்மீகம். 

ஆன்மீகம் என்றால் என்ன? - 01

ஆன்மீக அறிவு, ஆன்மீகத்தை பின்பற்றுகிறேன்,  நான் ஆன்மீக வாதி போன்றவை வெறுமனே ஆன்மீக புத்தகங்களை படிப்பதாலும், அத்தகைய விஷயங்களை உரையாடும் இடங்களில் உறுப்பினர்களாக இருப்பதாலும், தத்துவங்கள் பல தெரிந்திருப்பதாலும், புராணக்கதைகளை அழகாக சொல்லுவதாலும் அதன் உண்மை நோக்கத்தை அடைவிப்பதில்லை.

அழகாக பேசுவதாலும், நிறைய அறிவை பெற்றிருப்பதாலும் பலரை எம்மை நோக்கி கவர முடியும், பெயர் புகழ், பணம் என்பவற்றை உருவாக்க முடியும். இப்படி பலரை ஈர்க்க முடிவதால் அது ஆன்மீக முன்னேற்றம் என்று கருதமுடியாது.

இதுபோல் வெகுவிமரிசையாக செய்யப்படும் பூஜைகள், விரதங்கள், யாத்திரைகள், சடங்குகளும் ஆன்மீகம் என்று கருத முடியாது. இவை தறிகட்டு, செலவழியும் மனதை பொழுதுபோக்க எற்படுத்தப்பட்ட அமிசங்கள்.

பக்தி என்பது இன்று உணர்ச்சிவசப்படுவது, மாயக்காட்சிகளை கண்டு பூரிப்படைவதும் புலம்புவதுமாக அர்த்தப்படுத்தப்படுகிறது. பக்தி என்பது பக்தி செலுத்தப்படும் காரணத்துடன் இணைவதற்கான படிமுறையே அன்றி வெறுமனே உணர்ச்சி வசப்பட்ட கூச்சல் அல்ல.

பக்தி என்பது தான் என்ற தன்முனைப்பை தான் பக்தி செலுத்தும் இறையிடம் சரணடைந்து, தனது மனப்பாங்கினை மாற்றி, தனது இலட்சியத்தை அடைய முடியும் என்ற நேர் மனப்பான்மையும் தான் பக்தி செலுத்தும் இறைவனுக்கு கற்ப்பிக்கப் பட்ட பண்புகளை தன்னில் உருவாக்கும் பயிற்சி.

உண்மை பக்தி செலுத்தி சித்தியடைந்தவன் தான் பக்தி செலுத்திய இறையின் பண்புகளை தன்னில் விழிப்படைவித்தவன் ஆவான்.


உருவவழிபாடு உயர்ந்த பண்புகளையும் குணங்களையும் விழிப்படையச் செய்யும் குறியீடுகள். இந்த சின்னங்களை கண்களால் பார்ப்பதன் மூலம் மனதிற்கும், ஆழ்மனத்திற்கும் அதன் ஆற்றலை ஒருமுகப்படுத்தி நல்ல நோக்கத்திற்கு பயன்படுத்தும் பண்பினை தருகிறது. 

Sunday, January 14, 2018

முத்தி நெறி அறியாத மூர்க்கரும் சிவமாகலாம்!

முத்தி நெறியறியாத மூர்க்கரொடு முயல் வேனைப்
பத்தி நெறியறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம் 
சித்த மலம் அறுவித்துச் சிவமாக்கியெனை ஆண்ட 
அத்தனெனக் கருளியவாறார் பெறுவார் அச்சோவே

முத்தி நெறி அறியாத மூர்க்கரொடு சகவாசத்தை கொண்டிருந்த என்னையும் உன்மீது சரணாகதி அடைய செய்யும் பக்தி நெறியை நீயே அறிவித்து உன்னை அடைய தடையாக இருக்கும் எனது சித்தத்தில் உள்ள பழம் வினைகளையெல்லாம் நீயே அறுத்து, என்னையே சிவமாக்கி, என்னை ஆண்ட இந்தப் பேறு உனது அருள் இல்லாமல் கைகூடாது இத்தகைய பேறு யாருக்கு கிடைக்கும் என்று சிவபோகம் அனுபவித்த இன்பத்திளைப்பில் பாடிய பாடல் இது! மாணிக்கவாசகர் எவருக்கும் மூர்க்கரொடு முயலக்கூடாது என்று கூறவில்லை, மாறாக அத்தகைய மூர்க்கரொடு இருப்பவனாக இருந்தாலும் அத்தன் அருள் இருந்தால் சிவமாகலாம் என்கிறார். ஆக அவர்கள் எளிமையாக எல்லோரும் சிவத்தின் அருள் இருந்தால் சிவமாகலாம் என்று நம்பிக்கை கொடுத்து சென்றிருக்க நாம்தான் இது பிழை இதுசரி என்று வாதிட்டுக்கொண்டிருக்கிறோம். 😋


இந்தப்பாடல் தெரிவிக்க வரும் கருத்து ஒருவனை ஆன்மீக ரீதியிலும் மனவியல் ரீதியிலும் வலிமையுள்ளவனாக மாற்றும். இன்று பலரும் தமது பிரச்சனைக்கு தாமாக விடை கண்டுவிடலாம் என்று பலவித வியாக்கியானம் கொடுத்துக்கொண்டு அதே பிரச்சனையில் சக்கர வியூகத்தில் சிக்கிய மனிதனாக பிரச்சனையில் இருந்து வெளிவரமுடியாமல் தடுமாறிக்கொண்டு வாழ்வை துன்பமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இங்கு மாணிக்கவாசகர் சொல்லும் மனவியல் உத்தி மிக உயர்ந்த ஆலோசனை; நீ மூர்க்கருடன் சகவாசம் செய்யும் மூர்க்கனாக இருந்தாலும் உன்னைப் பற்றி தாழ்மையாக எண்ணி தாழ்ந்து விடாதே! எமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று சரணாகதி அடையும் மனப்பண்பு உனக்கு இருக்குமாக இருந்தால் அந்த இறைசக்தி உனது வினைகள் துன்பங்கள் எல்லாம் அறுத்து உன்னையே சிவமாக்கும்! நீயே சிவமாகி விட்டால் வாழ்வு இன்ப மயமாகும்!

ஆக உனது சிற்றறிவால் உன்னை நீயே வட்டத்திற்குள் அடைத்துக்கொண்டு பாவி, மூர்க்கன் என்று தாழ்த்தி விடாதே என்று கூறுகிறார்.


இதைத்தான் இன்று மேலை நாட்டு உளவியலாளர்களும், தலைமைத்துவ பண்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் Leadership, self esteem, self confidence என்றெல்லாம் பலவாறாக கூறுகிறார்கள்.

ஆன்மீகம் என்றால் என்ன? 06: ஆன்மீக மூட நம்பிக்கைகள்

இந்த உலகில் பலவகை மூட நம்பிக்கைகள் காணப்படுகிறது. ஆண்கள் மட்டும்தான் சில தெய்வங்களை வணங்க வேண்டும், பெண்கள் வணங்ககூடாது. சில ஜாதியை சேர்ந்...